ரீவைண்ட் 2025 ... இந்திய கிரிக்கெட் வெற்றிகளும், தோல்விகளும்... !
2025ம் ஆண்டு நிறைவடையும் வேளையில், இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் கலவையான நினைவுகள் பதிந்துள்ளன. 2024 நவம்பர் 22 முதல் 2025 ஜனவரி 7 வரை ஆஸ்திரேலியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர்–கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி அபார வெற்றியுடன் தொடங்கியது. முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இறுதியில் 1–3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பை வெல்லும் கனவும், 10 ஆண்டுகளுக்குப் பின் கோப்பியை தக்க வைக்கும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த தோல்வி இந்திய அணிக்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, மூத்த வீரர் விராட் கோலி மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தொடரின் பாதியில் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் பெரியதாக இருந்தது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
2010ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த அஸ்வின், இந்தியாவின் பொற்கால அணியின் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர். 106 டெஸ்ட்களில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, கும்பிளேக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியராக பெயர் பெற்றார். பேட்டிங்கிலும் 3,503 ரன்கள் சேர்த்த அஸ்வின் ஓய்வு, 2025ம் ஆண்டின் இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத திருப்பமாக பதிவானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 4–1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி 2025-ஐ வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான், துபாயில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆனால் பார்டர்–கவாஸ்கர் கோப்பை தோல்வியின் எதிரொலியாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக அப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஓய்வு பெற்றது, ஒரு யுகம் முடிந்த தருணமாக பேசப்பட்டது. இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
கேப்டனாக கில்லின் முதல் சவால் இங்கிலாந்து மண்ணில் ‘ஆண்டர்சன்–தெண்டுல்கர்’ கோப்பை தொடராக அமைந்தது. 5 டெஸ்டுகள் கொண்ட அந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்ற நிலையில், ஒரு போட்டி டிராவாகி தொடர் 2–2 என சமனில் முடிந்தது. கோலி, ரோகித் இல்லாத அணியுடன் இங்கிலாந்துக்கு சமமான பதில் கொடுத்த இந்தியா பாராட்டுகளை பெற்றது. கேப்டனாகவும், பேட்ஸ்மனாகவும் ஜொலித்த சுப்மன் கில் 754 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக மாறி, புதிய யுகத்தின் தொடக்கத்தை அறிவித்தார்.
துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதி போட்டியில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், தொடரில் மொத்தமாக அசத்திய அபிஷேக் சர்மா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது.
ஆனால் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில், இந்திய–பாகிஸ்தான் மோதல் களத்திலும் எதிரொலித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். டாஸ் நிகழ்ச்சியிலும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார். இதனால் போட்டி முழுவதும் பதற்றம் நிலவியது.
உச்சமாக, வெற்றிக் கோப்பை மற்றும் பதக்கங்களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்ததால் பரிசளிப்பு நிகழ்ச்சி சர்ச்சையாக முடிந்தது. இதனால் இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமல், அதிகாலை 1.30 மணியளவில் வெறுங்கையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து வெற்றியை கொண்டாடினர். கோப்பை இல்லாவிட்டாலும் உற்சாகம் குறையவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, சாம்பியன் அணி கோப்பை இல்லாமல் கொண்டாடிய தருணமாக இந்த ஆசிய கோப்பை பதிவானது.
அக்டோபர்–நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப்பில் இருந்து நீக்கி சுப்மன் கில்லை பிசிசிஐ நியமித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டி20-யிலிருந்தும், பின்னர் டெஸ்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த ரோகித், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தார். 2027 உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவாரா என்ற சந்தேகத்துடன், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன.
ஆஸ்திரேலியாவில் தொடங்கிய சுப்மன் கில்லின் ஒருநாள் கேப்டன் பயணம் தோல்வியுடன் ஆரம்பமானது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் டி20 அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய மண்ணிலேயே தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக ஜொலித்தார்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 408 ரன்கள் வித்தியாசமான தோல்வி, 12 ஆண்டுகளாக நீடித்த டெஸ்ட் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் தலைமையில் இந்தியா 2-1 என வென்று நம்பிக்கையை மீட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி மீண்டும் பேட்டில் மிரட்டினர்.
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் பிப்.7-ந் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்.12-ந் தேதி டெல்லியில் நமீபியா, பிப்.15-ந் தேதி கொழும்பில் பாகிஸ்தான், பிப்.18-ந் தேதி ஆமதாபாத்தில் நெதர்லாந்துடன் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் ஆலோசித்து அணியை இறுதி செய்தது. சூர்யகுமார் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டது கவனத்தை ஈர்த்தது.
விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேக்கப்பாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். ரிங்கு சிங்கும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அனுபவமும் இளம் வேகமும் கலந்த இந்த அணி, கோப்பை கனவை நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய பெண்கள் அணி சாதனை படைத்தது.
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி கோப்பையை வென்றது இதுவே முதல் முறை. இதற்கு முன் 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த நீண்ட ஏக்கத்தை இந்த முறை முழுமையாக துடைத்தெறிந்தது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி வெளிப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.