இந்திய ஹாக்கி நடுவர் மீது பாலியல் புகார் - ஆசிய விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!
இந்திய ஹாக்கி நடுவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான குரிந்தர் சிங் சங்ஹா மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து அவர் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் சார்பில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான நடுவர் மேலாளராக குரிந்தர் சிங் சங்ஹா நியமிக்கப்பட்டிருந்தார். ஜப்பானின் நகோயாவில் அவர் தங்கியிருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த பெண் ஹாக்கி அதிகாரியிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து குரிந்தர் சிங் சங்ஹா ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ஹாக்கி இந்தியா தரப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆசிய ஹாக்கி கூட்டமைப்பிடம் இருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹாக்கி இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக குரிந்தர் சிங் சங்ஹா குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அவை தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தனது குடும்ப காரணங்களுக்காகவே முன்கூட்டியே திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குரிந்தர் சிங் சங்ஹா மீது இதற்கு முன்பும் புகார் எழுந்துள்ளது. 2025-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டியின்போது பெண் நடுவர் ஒருவர் அவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஹாக்கி இந்தியா சார்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை என ஹாக்கி இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி நடுவர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பே நியமிக்கிறது. தற்போதைய புகார் தொடர்பாக அந்த அமைப்பின் அறிக்கை கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய ஹாக்கி வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.