சிங்கப்பூரில் இந்திய ஐ.டி. ஊழியருக்கு 6 மாத சிறைத்தண்டனை - அரசு லேப்டாப்பில் விதிகளை மீறிச் செயல்பட்டதாக புகார்!

 

சட்டம்-ஒழுங்கு மற்றும் தரவுப் பாதுகாப்பில் கடுமையான விதிமுறைகளைக் பின்பற்றும் சிங்கப்பூரில், அரசுக்குச் சொந்தமான கணினியை முறைகேடாகப் பயன்படுத்திய இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஒப்பந்த ஊழியருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிங்கப்பூரில் ஐ.டி. ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வரும் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் தமிழ்கோவன் (42), தகவல் பாதுகாப்புத் தேர்வு எழுதுவதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட அரசு லேப்டாப்பை விதிகளை மீறிப் பயன்படுத்தியுள்ளார்.

அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்வதற்காக, இந்தியாவில் இருந்த அடையாளம் தெரியாத நபருக்கு 'ரிமோட் அக்சஸ்' அனுமதியை அவர் சட்டவிரோதமாக வழங்கியுள்ளார்.

அவர் பயன்படுத்திய அந்த லேப்டாப்பில் நீதிமன்றங்களின் இரகசிய வார்த்தைகள் அடங்கிய 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கியக் கோப்புகள் இருந்தன. தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றாலும், நாட்டின் நீதித்துறை ரகசியங்களை அந்நிய நபர் ஒருவர் பார்க்கும் வகையில் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சிங்கப்பூர் நீதிமன்றம் ஜனார்த்தனன் தமிழ்கோவனுக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.