குவைத் விமான நிலையத் தாக்குதல் வீடியோ வெளியானது - இந்தியர் பலி; தூதரகம் உறுதி!
நேற்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1 வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலின் பதறவைக்கும் முதல் நிமிட சிசிடிவி காட்சிகளை குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
குவைத் அரசு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் திடீரென அசுர வேகத்தில் வந்து விழுந்த தற்கொலைப்படை டிரோன்கள் வெடித்துச் சிதறும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்து கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு உயிர் பிழைக்க ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்தத் துயரமான வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களை குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர் ஒரு இந்தியக் குடிமகன் என்பதை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தூதரகம், விபரங்களைச் சேகரித்து வருவதாகக் கூறியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 63 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பேருக்கு அவசரக் கால முதன்மை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அண்டை நாடான ஈரானே முழு முதற்காரணம் என்று குவைத் அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று விடியற்காலை முதல் குவைத் வான்பரப்பிற்குள் ஊடுருவ முயன்ற ஈரானின் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 17 தற்கொலைப்படை டிரோன்கள் என மொத்தம் 30 இலக்குகளைத் தங்களது பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகக் குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல்அஜீஸ் அல்-ஒதைபி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் இருவரை அந்நாட்டு அரசு உடனடியாகப் பணிநீக்கம் செய்து, 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறுபுறம், ஈரானின் புரட்சிகரக் காவல்படை இந்த விமான நிலையத் தாக்குதலுக்குத் தங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் தங்களது கெஷ்ம் தீவில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-ஆவது கடற்படைத் தலைமையகத்தை மட்டுமே தாங்கள் குறிவைத்ததாக ஈரான் தரப்பு வாதிடுகிறது.