போர் பதற்றத்தால் இந்தியர்கள் நாடு திரும்பத் திணறல் - திடீரென இஸ்ரேலுக்கு விமான சேவையை நிறுத்திய ஏர் இந்தியா!

 

மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமானச் சேவைகளையும் ஏர் இந்தியா நிறுவனம் வரும் மே 31ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் நேரடித் தாக்குதல்கள், வான்வழிப் பாதைகளில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது: ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் அல்லது பயணத் தேதியை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்புச் சூழல் சீரடைந்த பிறகு சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இஸ்ரேலில் உள்ள இந்திய மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்:

விமான சேவை இல்லாததால், இந்தியர்கள் நில எல்லை வழியாக ஜோர்டான் (Jordan) அல்லது எகிப்து போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து பிற விமான நிறுவனங்கள் மூலம் இந்தியா திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது இஸ்ரேலின் 'எல் அல்' உள்ளிட்ட ஒரு சில உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்கி வருகின்றன. ஆனால், அவற்றின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஏப்ரல் 7) ஈரான் தனது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.