மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு இந்தியக் கடற்படை வீரர் தற்கொலை!

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலாபா பகுதியில், இந்தியக் கடற்படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்துக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலாபா பகுதியில் வசித்து வந்த புரன்மல் ஷம்புலால் (30) என்பவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒமா (28) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

புரன்மல் ஷம்புலால் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். அவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, வீட்டில் இருந்த அறையில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடற்படை வீரர் குடும்பத்துடன் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.