வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு!

 

நாடு முழுவதும் நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் எல்.பி.ஜி இறக்குமதி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகச் சங்கிலி பாதிப்பால், கைவசம் உள்ள எரிபொருளைக் கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் 19 கிலோ மற்றும் 47 கிலோ சிலிண்டர்களின் விநியோகம் இன்று முதல் கணிசமாகக் குறைக்கப்பட்டு, பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

"சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் விநியோகம் மீண்டும் தொடங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்களுக்குச் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டால், உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும், பல சிறிய உணவகங்கள் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.