உயிரைப் பணயம் வைத்து பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிப்பு!
துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் சக விமானியால் கத்திக் குத்துக்கு ஆளான நிலையிலும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சாரின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இவரது வீரத்தைப் போற்றும் வகையில் மேன்கைண்ட் பார்மா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற 'பிளைதுபாய்' விமானத்தை மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய விமானி ஸ்மிட் மச்சார் இயக்கியபோது, 34,000 அடி உயரத்தில் வைத்து ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்ஹமாமி அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
கடுமையான காயங்களுடன் ஆபத்தான சூழலில் இருந்தபோதும், துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகக் கையாண்டு பல உயிர்களை ஸ்மிட் மச்சார் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானியின் தியாகத்தையும் தலைமைப் பண்பையும் பாராட்டும் விதமாக, ஸ்மிட் மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மேன்கைண்ட் பார்மா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "நீங்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், உங்களுக்கு எங்கள் சல்யூட்" என்று அந்நிறுவனம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.