நடுவானில் 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார்: துபாய் இளவரசர் நேரில் சந்தித்து பாராட்டு!

 

நடுவானில் சக விமானியின் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஆளான நிலையிலும், தனது அபாரத் துணிச்சலாலும் சாதுரியத்தாலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் நேரில் சந்தித்து மனதாரப் பாராட்டியுள்ளார்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் பறந்து கொண்டிருந்த 'பிளைதுபாய்' விமானத்தில், இணை விமானியான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி என்பவர், கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளார்.


படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தபோதிலும், ஸ்மித் மச்சார் சாதுரியமாகச் செயல்பட்டுக் காக்பீட் கதவைத் திறந்ததால், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினர். பின்னர் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் விமானம் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டு, 174 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

சவுதியில் முதலுதவிக்குப் பின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் துபாய்க்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமானி ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் துபாய் இளவரகருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது தியாக உணர்வைப் பாராட்டியதுடன், அமீரகம் எப்போதும் அவருக்குத் துணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.