ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட் முன்பதிவு - புதிய சாதனைப் படைத்தது ஐஆர்சிடிசி!
Updated: Sep 11, 2026, 18:29 IST
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு அதிகரித்துள்ள நிலையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 20,06,353 ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஐஆர்சிடிசி இதுவரை இல்லாத புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 18,40,203 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலத்தைக் முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வெளிமாநிலப் பயணங்களை மேற்கொள்ளவும் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்தமையே இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணமாகும்.