ஜூலையில் 14.13 கோடி டன் சரக்குகள் கையாண்டு இந்திய ரயில்வே புதிய சாதனை!

 

கடந்த ஜூலை மாதத்தில் இந்திய ரயில்வே மொத்தம் 14.13 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விடக் கூடுதலாக ரூ.1,137 கோடி வருவாயையும் ஈட்டியுள்ளது.

அசாத்திய வளர்ச்சி: மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ரயில்வேயின் சரக்கு கையாளுதல் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரித்ததன் மூலம், ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டை விட 8 சதவீதம் கூடுதல் வருவாய், அதாவது ரூ. 1,137 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தடையின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இரும்புத் தாது போக்குவரத்து 22.2 சதவீதமும், உரங்கள் போக்குவரத்து 12 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேபோல உணவு தானியங்கள் மற்றும் நிலக்கரி போக்குவரத்து தலா 11.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் தொழில் தேவைகளுக்கான மூலப்பொருட்களை விரைவாக விநியோகித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய ரயில்வேத் துறை தொடர்ந்து முக்கிய உந்துசக்தியாகத் திகழ்ந்து வருகிறது.