இந்திய மாலுமி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை - சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் வெறிச்செயல்!

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் கச்சா எண்ணெய் கப்பலைக் கடத்திய கடற்கொள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலில், மீட்பு நடவடிக்கையின் போது இந்திய மாலுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற பலாவு நாட்டுக்கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் அருகே சென்றபோது கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பலில் மொத்தம் 17 மாலுமிகள் பயணம் செய்தனர்.

கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியக் கடற்படையினர் தீவிர நடவடிக்கை மூலம் மீட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி, ஒரு மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 3 பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 5 மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த போதிலும், கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் எஞ்சிய 12 மாலுமிகளும், கச்சா எண்ணெய் கப்பலும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.