இந்திய விஞ்ஞானி தீபக் தாருக்கு சர்வதேசவிருது... இயற்பியல் ஆய்வில் சிறப்பான பங்களிப்பு!

 

இத்தாலியில் இயங்கி வரும் அப்துஸ் சலாம் சர்வதேச இயற்பியல் கோட்பாட்டு மையம் வழங்கக் கூடிய உயரிய விருதான 'டிரக் பதக்கம் 2026' புள்ளியியல் இயற்பியல் துறையில் அளப்பரிய பங்களிப்பு ஆற்றிய இந்திய விஞ்ஞானி தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் பெற்ற இந்த உயரிய விருதை, இந்திய நாட்டில் பணியாற்றி வரும் ஓர் அறிவியல் அறிஞர் பெறிருப்பது நாட்டிற்கும் இந்திய அறிவியல் உலகிற்கும் கூடுதல் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. 2012-ல் அசோக் சென் பெற்ற பிறகு, இந்தியாவில் பணியாற்றி இப்பதக்கத்தைப் பெறும் இரண்டாவது விஞ்ஞானி தீபக் தார் ஆவார்.

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தாய்மொழி வழியில் பள்ளிக்கல்வி பயின்ற தீபக் தார், அறிவியல் மீதிருந்த தீராத ஆர்வத்தால் அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி-யில் உயர் கல்வி கற்றார். அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்டெக் நிறுவனத்தின் உதவித்தொகையைப் பெற்று, அங்குள்ள உலகின் முன்னணி இயற்பியலாளரான ரிச்சர்ட் ஃபைன்மேனின் கீழ் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து 1978-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் அளித்த வேலை வாய்ப்புகளை மறுத்து இந்தியா திரும்பியவர், மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

புனே ஐசர் நிறுவனத்தில் சுமார் 8 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிப் பல இளம் இயற்பியல் ஆய்வாளர்களை உருவாக்கினார். தற்போது பெங்களூரில் உள்ள சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

புள்ளியியல் இயற்பியலில் எளிமையான தொடர்புகள் எவ்வாறு பெரிய அமைப்புகளில் எதிர்பாராத சிக்கலான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியில் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார். இவருடைய மணல் குவியல் மாதிரி கோட்பாடு, நிலநடுக்கங்கள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் நிதிச் சந்தை மாற்றங்கள் போன்றவற்றை கணிப்பதற்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச இயற்பியல் அமைப்பின் மிக உயரிய போல்ட்ஸ்மேன் பதக்கம் மற்றும் இந்தியாவின் பத்மபூஷண் விருது ஆகியவை இவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டிற்கான 'டிரக் பதக்கம்' தீபக் தாருடன் சேர்த்து புள்ளியியல் இயற்பியலில் சிறப்பாகப் பங்காற்றிய பேராசிரியர் பெர்னாட் டெரிடா (பிரான்ஸ்), பேராசிரியர் மார்க் மெசார்டு (இத்தாலி), பேராசிரியர் ஹைம் சோம்போலின்ஸ்கி (இஸ்ரேல்) ஆகிய மூன்று சர்வதேச விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது: