அமெரிக்காவில் இந்திய மாணவி அக்‌ஷிதா மரணம்!

 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உயர்கல்வி படித்து வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி அக்‌ஷிதா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையேயும் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நடைபயிற்சியின் போது அசம்பாவிதம்:தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நல்லமலா ஆனந்த் என்பவரின் மகள் அக்‌ஷிதா (25). இவர் தனது சகோதரன் அக்‌ஷய்யுடன் இணைந்து நியூயார்க்கின் அல்பெனி பகுதியில் தங்கி, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை (MS) பட்டப்படிப்பை நிறைவு செய்து வேலை தேடி வந்தார்.

இந்நிலையில் இரவில் உணவருந்திய பிறகு தனது சகோதரனுடன் தங்கியிருந்த அறையின் வெளியே வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாகத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுச் சாலையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட சகோதரன் அக்‌ஷய் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அக்‌ஷிதா ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அக்‌ஷிதாவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகம் மூலம் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.