கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் தவிப்பு... தேசிய மருத்துவ ஆணைய விதிகளால் மருத்துவக் கல்வி சிக்கல்!

 

கிர்கிஸ்தானில் அரசு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களை மாற்றுப் பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிர்கிஸ்தானில் அரசு அங்கீகாரம் பெறாத 13 பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்களை வேறு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மருத்துவப் பதிவு பெற வேண்டுமானால், தேசிய மருத்துவ ஆணையத்தின் கடுமையான விதிகளின்படி, மருத்துவப் படிப்பையும் அதற்கான நடைமுறைப் பயிற்சியையும் ஒரே கல்வி நிறுவனத்தில்தான் முழுமையாக முடிக்க வேண்டும்.

தற்போது மாணவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டால், அவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுமா என்ற பதற்றமும் அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள 2,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று அனைத்து இந்திய மருத்துவ மாணவர்கள் சங்கம் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளது.