பீட்சா டெலிவரி பாய் முதல் 3 உணவக உரிமையாளர் வரை! ஆஸ்திரேலியாவில் அசத்திய இந்திய இளைஞர்!

 

 

மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்ற இந்திய இளைஞர் ஒருவர், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பீட்சா டெலிவரி வேலைக்குச் சென்ற நிலையில், விடாமுயற்சியால் தற்போது 3 பீட்சா உணவகங்களின் உரிமையாளராக மாறியுள்ள வெற்றிக்கதை இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த அந்த இளைஞர் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கல்விக்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார். படிப்பை முடித்த பிறகு தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்காததால், அங்குள்ள பீட்சா கடை ஒன்றில் முழுநேர பணியில் சேர்ந்துள்ளார். பீட்சா தயாரிப்பு பணிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதும் அவரது வேலையாக இருந்துள்ளது.

allowfullscreen

சுமார் 3 ஆண்டுகள் அந்தத் துறையில் பணியாற்றிய அவர், பீட்சா தொழிலின் செயல்பாடுகள் மற்றும் வணிக நுணுக்கங்களை கற்றுக்கொண்டுள்ளார். பின்னர் தொழில் கூட்டாளி ஒருவருடன் இணைந்து, தான் பணியாற்றிய நிறுவனத்தின் ஒரு பீட்சா franchise-ஐ பெற்றுள்ளார்.அதன்பிறகு அவரது தொழில் படிப்படியாக வளரத் தொடங்கியுள்ளது. ஒரு franchise-ல் தொடங்கிய பயணம், அடுத்தடுத்த காலங்களில் மேலும் இரண்டு கிளைகளை வாங்கும் அளவுக்கு வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அவர் 3 பீட்சா உணவகங்களின் உரிமையாளராக உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட அவர், தனது தொழிலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் இந்தியா திரும்பிய அவர் திருமணம் செய்து கொண்டு, பின்னர் மனைவியுடன் மீண்டும் ஆஸ்திரேலியா சென்றதாக அவரது மைத்துனர் வினீத் கே. சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொழில் வளர்ச்சியுடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் சொந்தமாக வீடு மற்றும் BMW கார் வாங்கியதாகவும், இந்தியாவின் ஐதராபாத்தில் குடும்பத்திற்காக வீடு கட்டியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞரும் அவரது குடும்பத்தினரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுள்ளனர். இந்த தகவலை அவரது மைத்துனரும் தொழிலதிபருமான வினீத் கே. எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கைப் பயணம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத சூழலில் பீட்சா டெலிவரி பணியில் இருந்து தொடங்கி, பின்னர் அதே துறையில் தொழில் வாய்ப்பை உருவாக்கி 3 உணவகங்களின் உரிமையாளராக மாறிய இந்த பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும், இந்த வெற்றிக்கதையில் இடம்பெறும் தனிப்பட்ட தகவல்கள் அவரது மைத்துனர் பகிர்ந்த சமூக வலைதளப் பதிவை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.