அமெரிக்காவில் கூகுள் நிறுவன இந்திய வம்சாவளி பெண் தலைமை அதிகாரி சுட்டுக்கொலை; கணவர் கைது!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவன பெண் தலைமை அதிகாரி ஷீத்தல் (57), குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி குடும்பத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, ஷீத்தலின் கணவர் கிர்க் வர்செசியன் திடீரென துப்பாக்கியை எடுத்து மனைவியையும், மகனையும் நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குண்டுக் காயங்களுடன் உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த ஷீத்தல் மற்றும் அவரது மகன் ஜேசன் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீத்தல், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஜேசனுக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஷீத்தலின் கணவர் கிர்க் வர்செசியனை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவரிடம் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டிற்கான துல்லியமான காரணம் மற்றும் காயமடைந்த மகன் ஜேசனின் தற்போதைய உடல்நிலை குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
உயிரிழந்த இந்திய வம்சாவளிப் பெண் அதிகாரி ஷீத்தல், தொழில்நுட்பத் துறையில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர்: கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். அமெரிக்காவிற்கு இடம் பெயர்வதற்கு முன்பாக அவர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் கானா ஆகிய நாடுகளில் வசித்துள்ளார். கடந்த 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.
பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உயரிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள அவர், தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.