சுவீடன் நாட்டு எம்பியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு - நிலா விகே பாட்டீல் சாதனை!
சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்திய வம்சாவளிப் பெண்ணான நிலா விகே பாட்டீல் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுவீடன் நாட்டில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிலா விகே பாட்டீல் (41) வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 349 இடங்களைக் கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி நூலிழையில் பெரும்பான்மை பெற்றுள்ள சூழலில், இவர் எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் மிக முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப் பேத்தியும், மறைந்த மத்திய அமைச்சர் பாலசாகேப் விகே பாட்டீலின் பேத்தியும், தற்போதைய மராட்டிய அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளுமாவார்.
சுவீடனில் பிறந்திருந்தாலும், தனது ஆரம்பகாலக் குழந்தைப்பருவத்தை மராட்டிய மாநிலம் அகமதுநகரில் அவர் கழித்துள்ளார். சுவீடனில் எம்பிஏ கல்வி பயின்ற இவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்த நாட்டின் பசுமைக் கட்சியில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார். மேலும், சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைக்கான அரசியல் ஆலோசகராகவும் இவர் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார்.
தனது தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய நிலா விகே பாட்டீல், தனக்கு 15 வயதாக இருக்கும் போதே மராட்டிய மாநில பட்ஜெட்டைப் படிக்க வைத்த தனது தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் இன்று உயிரோடு இருந்திருந்தால் தனது வெற்றியைக் கண்டு பெருமைப்பட்டிருப்பார் என்றும், தனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் சுவீடன் நாடாளுமன்றத்தில் எம்பியாகத் தேர்வாகியிருப்பது மராட்டிய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.