லண்டனில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொலை; அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் வெறித்தனம்!

 

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் விரைந்து வந்த லண்டன் பெருநகரக் காவல்துறையினர், ஆபத்தான நிலையிலிருந்த அப்பெண்ணை மீட்க முயன்றனர். இருப்பினும், துப்பாக்கிக் குண்டுகள் பலமாகப் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து லண்டன் போலீசார் நடத்திய  புலன் விசாரணையில், இக்கொடூரப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி குறித்த விவரங்கள் அம்பலமாகின. கொலையில் ஈடுபட்டவர் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரஜத் ஜஸ்வெல் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக முயன்ற ரஜத் ஜஸ்வெல்லை உடனடியாக மடக்கிப் பிடித்துக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரஜத் ஜஸ்வெல் மீது கொலைக் குற்றம் மற்றும் சட்டவிரோதமாகப் பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல்  உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த லண்டன் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கான பின்னணி காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.