இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை!
மத்திய அரசின் மிக முக்கியத் திட்டமான 'தற்சார்பு இந்தியா' ப் கொள்கையின் கீழ், உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பதை ஊக்குவித்ததன் விளைவாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு முந்தைய நிதியாண்டை விட 15.6 விழுக்காடு (15.6%) அதிகரித்து, ரூ. 1.78 லட்சம் கோடி என்ற அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
பாதுகாப்பு உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தரைப்படை, கடற்படை, விமானப்படை சார்ந்த உற்பத்திப் பிரிவுகள் தங்களது சிங்கப் பங்காக 76 விழுக்காட்டுப் பங்களிப்பை (76%) வழங்கி முதலிடத்தில் நீடிக்கின்றன.
பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் காரணமாக, அவற்றின் பங்களிப்பு 24 விழுக்காடாக (24%) உயர்ந்துள்ளது. இது உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த இமாலய வளர்ச்சி குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
"பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வையான 'தற்சார்பு இந்தியா' திட்டத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வெற்றி கிடைத்துள்ளது. ரூ. 1.78 லட்சம் கோடி என்ற வரலாற்றுச் சாதனை இலக்கை எட்டியதற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கடின உழைப்பே காரணம். இதன் மூலம் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா மிக முக்கியப் புள்ளியாக உருவெடுத்துள்ளது."
உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, உலக நாடுகளுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா மிக அதிவேகமாக முன்னேறி வருகிறது.