இந்தியாவின் முதல் 'கருப்பு பூனைப் படை' தலைவர் ஆர்.டி. நகரானி காலமானார்... ராணுவ, காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி!
இந்தியாவின் மிக உயரிய சிறப்புப் பாதுகாப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படையின் முதல் தலைமை இயக்குநரும் முன்னாள் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஆர்.டி. நகரானி (98) வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
1951-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான ஆர்.டி. நகரானி, காவல்துறை மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 1984-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு உருவாக்கப்பட்டு, 'கருப்பு பூனைப் படை' என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் முதல் தலைமை இயக்குநராக 1984 முதல் 1986 வரை பணியாற்றினார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலில் புகுந்த பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த இவரது தலைமையில் 'ஆபரேஷன் பிளாக் தண்டர்' நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் விஐபி பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்படும் பிணைக்கைதிகளை மீட்பது மற்றும் அதிரடிப் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகத் திறமையான படையை வடிவமைப்பதில் இவர் முதன்மைப் பங்காற்றினார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்துத் தந்த ஆர்.டி. நகரானியின் மறைவுக்கு ராணுவ அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.