இந்தியாவின் முதல் ‘ஹைட்ரஜன் ரயில்’ .. நாளை மறுதினம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!

 

சுற்றுச்சூழல் மாசற்ற பசுமைப் போக்குவரத்தை நோக்கி இந்திய ரயில்வே எடுத்து வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்தியாவின் முதலாவது 'ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்' நாளை மறுதினம் ஜூலை 17-ம் தேதி வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது. அரியானா மாநிலத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அதிநவீன ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக, முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின்களைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. வடக்கு மண்டல ரயில்வேயின் கீழ் சுமார் ரூ.140 கோடி மதிப்பீட்டிலான இந்த முன்னோடித் திட்டம்  செயல்படுத்தப்பட்டது. இந்த ஹைட்ரஜன் ரயிலை வடிவமைத்து, அதன் பெட்டிகளை உருவாக்கும் பிரம்மாண்ட பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

தயாரிப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டரை மாதங்களாகப் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ரயில்வே வாரியம் இந்த ரயிலை பொதுப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப் பச்சைக்கொடி காட்டியது.

மின்மயமாக்கப்படாத சாதாரண வழித்தடங்களில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இந்த நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், அரியானா மாநிலத்தின் 'ஜிந்த்' நகரிலிருந்து 'சோனிபட்' (Sonipat) இடையேயான 89 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. ஜிந்த் - சோனிபட் இடையேயான 89 கி.மீ தூரத்தை இந்த ரயில் 2 மணி நேரத்தில் கடக்கும். சோதனை ஓட்டத்தின் போது 120 கி.மீ வேகம் வரை சென்ற போதிலும், இதன் வழக்கமான இயக்க வேகம் மணிக்கு 75 கிலோமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் 8 பயணியர் பெட்டிகள் மற்றும் 2 என்ஜின் பெட்டிகள் என மொத்தம் 10 பெட்டிகள் இருக்கும். இதில் ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும். டீசல் என்ஜின்கள் போலக் கார்பன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடாமல், காற்றில் உள்ள ஆக்சிஜனையும், ரயிலில் சேமிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் வேதிவினைக்கு உட்படுத்தி இதற்கான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த ரயிலில் இருந்து புகைக்குப் பதிலாக வெறும் நீராவி மட்டுமே வெளியேறும்.

ஜெர்மனி, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் ஒரு சில வளர்ந்த நாடுகளின் பட்டியலில், தற்பொழுது இந்தியாவும் ஹைட்ரஜன் தொழில்நுட்ப ரயிலைப் பயன்படுத்திப் பசுமைப் புரட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.