இந்தியாவின் முதல் 'ஹைட்ரஜன் ரயில்' ஜூலை 17ல் தொடக்கம்!
இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்னும் 8 நாட்களில், அதாவது வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் முறைப்படியாகத் தனது சேவையைத் தொடங்கவுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்க விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு இந்த அதிநவீன பசுமை ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஹைட்ரஜன் ரயில் வழக்கமான டீசல் அல்லது மின்சார ரயில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பிரத்யேகச் சேமிப்புக் கலன்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சேமிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் வெளியில் அனுப்பப்படும் போது, அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதிவினைக்கு உட்பட்டு மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் ரயிலின் மோட்டார் மற்றும் சக்கரங்களை இயக்குகிறது.
பிற வாகனங்களைப் போல இதிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் டை ஆக்சைடு வாயுவோ அல்லது கரும்புகையோ வெளியாகாது. மாறாக, வெறும் தண்ணீரும் வெப்பமும் மட்டுமே கழிவாக வெளியாகும் என்பதால் இது 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது.
இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும். இதில் 1200 கிலோ வாட் திறன் கொண்ட 'ஹைட்ரஜன் புயல் ப்ரொபைல் சிஸ்டம்' பொருத்தப்பட்டுள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு இன்றித் தொடர்ந்து பயணிக்க முடியும்.
ஒருமுறை இந்த ரயிலைப் பயன்படுத்தும் போது சுமார் 2600-க்கும் மேற்பட்ட பயணிகள் மிக வசதியாகவும் சொகுசாகவும் பயணிக்கும் வகையில் இதன் உள்புறக் கட்டமைப்பு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு தற்பொழுது அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' அமைப்பாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையேயான 89 கிலோ மீட்டர் தூர வழித்தடத்தில் முதற்கட்டமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு மலைப்பாதைகள் மற்றும் முக்கிய வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில் சேவை வரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று இந்திய ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.