இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க முடிவு - 33% மகளிர் இடஒதுக்கீட்டுடன் அதிரடி!
இந்திய ஜனநாயகத்தின் புதிய அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா நாளை மறுநாள் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது மக்களவையில் 543 இடங்கள் உள்ள நிலையில், புதிய சட்டத்திருத்தத்தின்படி மொத்த இடங்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மாநிலங்களுக்கான இடங்கள் 815 தொகுதிகள், யூனியன் பிரதேசங்களுக்கான இடங்கள் 35 தொகுதிகள் என சேர்த்து மொத்தம் 850 தொகுதிகளாக உயர்த்தப்பட உள்ளது. இந்தத் தொகுதி மறுவரையறை பணிகள், 2026-க்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காகக் காத்திருக்காமல், முன்கூட்டியே தொடங்குவதற்கான சட்டத் திருத்தங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு ஏற்கனவே நிறைவேற்றிய 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) இந்தத் தொகுதி அதிகரிப்புடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 850 இடங்களில், பெண்களுக்கு 1/3 பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் சுமார் 280 பெண் எம்.பி-க்கள் இடம்பெறுவது உறுதியாகும். இதன் மூலம் இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரலாறு காணாத உச்சத்தைத் தொடும்.
தற்போதுள்ள 543 இடங்கள் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அமைக்கப்பட்டவை. கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஒரு எம்.பி கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியுள்ளது. இதனைச் சமன் செய்யத் தொகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன.
வரும் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து, புதிய தொகுதிகளின் அடிப்படையில் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, மாநிலங்களுக்கு இடையேயான இடங்களின் விகிதாச்சாரத்தில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது (உதாரணமாக தமிழகத்தின் இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளது).
இன்று மசோதாவின் நகல்கள் அனைத்து எம்.பி-க்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 16ம் தேதி நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கும். தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு.இந்த அதிரடி மாற்றம் இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது. அதே சமயம், தென் மாநிலங்களின் உரிமைகள் குறித்தும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்படுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் சில கவலைகளைத் தெரிவித்துள்ளன.