உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் மகேந்திரகிரி' போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைந்தது!

 

சீனக் கடற்படைக்கு நிகராக இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட 6-வது பிரம்மாண்ட போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் மகேந்திரகிரி' ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாகக் கடற்படையில் இணைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கடற்படையின் வலிமையைப் பெருக்க மத்திய அரசு 40 நாட்களுக்கு ஒருமுறை புதிய போர்க்கப்பலைக் கடற்படையில் இணைக்கும் இலக்கோடு செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய அங்கமாகச் செயல்படுவதுதான் 'புராஜெக்ட் 17ஏ'. கடந்த 2009-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 45,000 கோடி செலவில் 7 அதிநவீன போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் உருவான முதல் போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் நீலகிரி' கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடற்படையில் இணைக்கப்பட்டது.

மும்பை மசகான் டாக் நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 6-வது போர்க்கப்பல், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. நீளம்: 149 மீட்டர், எடை: 6,670 டன், வேகம் மணிக்கு 52 கிலோமீட்டர் மூத்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் என மொத்தம் 230 கடற்படை வீரர்கள் இதில் பணியாற்ற முடியும்.

எந்தவொரு நாட்டிற்கும் திறமையான மற்றும் உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய கடற்படை எவ்வளவு அவசியம் என்பதைச் சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன. மேற்காசியப் பகுதிகளில் போர் தொடங்கிய காலகட்டத்தில், இந்தியக் கடற்படை முன்னெடுத்த 'ஆபரேஷன் ஊர்ஜா சுரக்‌ஷா' மூலம் சுமார் ரூ. 9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்தச் சாதனை, இந்தியக் கடற்படையானது வெறும் போர்ப்படையாக மட்டுமின்றி, தேசத்தின் பொருளாதார நலன்களுக்கான வலுவான பாதுகாவலனாகவும் திகழ்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.