6 சர்வதேச நகரங்களுக்கான விமான சேவைகள் ரத்து ... இண்டிகோ திடீர் அறிவிப்பு!  

 

இந்தியாவின் முன்னனி தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, தனது உலகளாவிய விமான சேவை வலையமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக அளவில் உள்ள முக்கிய 6 சர்வதேச நகரங்களுக்கான தங்களின் விமான சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக அந்த நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவு சர்வதேச விமானப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி ஜூலை 1-ந் தேதி முதல் மலேசியாவின் லங்காவி, தாய்லாந்தின் கிராபி, வியட்நாமின் ஹோ சி மின், ஹாங்காங் மற்றும் சீனாவின் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கான சேவைகள் நிறுத்தப்படுகின்றன. மேலும் ஜூலை 3-ந் தேதி முதல் கம்போடியாவின் செம் ரியப் நகரத்திற்கான விமான சேவைகளும் செப்டம்பர் 30-ந்தேதி வரை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. வரவிருக்கும் காலாண்டில் பயணிகளின் தேவை குறைவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் மிகவும் நெருக்கடியான சூழல்களைக் கணக்கில் கொண்டே இந்த தற்காலிக ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் எதிர்காலத்தில் சர்வதேசப் போக்குவரத்துச் சூழல் மேம்படுவதைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து நகரங்களுக்கான சேவைகளும் மீண்டும் தொடங்கப்படும். இதற்கான பயண முன்பதிவுகள் அனைத்தும் அக்டோபர் 1-ந்தேதி முதல் மீண்டும் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.