பறவை மோதியதால் பரப்பரப்பு... புறப்பட தயாரான  பெங்களூரு - மும்பை இண்டிகோ விமானத்தில் பயணிகள் கடும் அவதி!  

 

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ321நியோ (Airbus A321Neo) விமானம் மீது திடீரெனப் பறவை ஒன்று மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் ஓடுதளத்தில் அதிவேகமாக நகர்ந்து (Taxiing), டேக்-ஆஃப் செய்யத் தயாரான சில நொடிகளுக்கு முன்பு இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது.

பறவை மோதியதை உடனடியாக உணர்ந்த விமானத்தின் ஓட்டுநர், சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை அவசரமாக ஓடுதளத்திலிருந்து மீண்டும் பார்க்கிங் பகுதிக்குக் கொண்டு சென்றார். இந்த திடீர் திருப்பத்தால் விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மிகுந்த பதற்றத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் தொழில்நுட்பக் குழுவினரால் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு விமானம் பாதுகாப்பானது என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பின் அந்த விமானம் மும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது.