243 பயணிகளுடன் சென்ற இந்தோனேசியக் கப்பல் மாயம் - 103 பேர் மீட்பு; ஒருவர் பலி!

 

இந்தோனேசியாவில் மோசமான வானிலை காரணமாக 243 பயணிகளுடன் நடுவழியில் மாயமான பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபயா தீவிலிருந்து போர்னியோவின் பாஞ்சர்மசின் திசையை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ் போர்ட் 8’ என்ற பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் 243 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

பாஞ்சர்மசின் பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரெனக் கப்பல் நிறுவனத்துடனான தொடர்பை இழந்ததுடன் ரேடார் சிக்னல்களும் நின்றுபோய்ப் பரிதாபமாக மாயமானது.

கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மோசமான வானிலை காரணமாகக் கப்பலுக்குள் நீர் புகுந்ததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் 103 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பயணிகளைத் தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல் வழிப் போக்குவரத்து பிரதானமாக உள்ளபோதிலும், முறையான பாதுகாப்புத் தரநிலைகளின்மை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பாலிக்கு அருகில் நிகழ்ந்த படகு விபத்தில் 211 பேர் மீட்கப்பட்டதும், ஜூலை மாதம் செலாயார் தீவு அருகே படகு மூழ்கியதும் குறிப்பிடத்தக்கது.