"பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது!" - அன்புமணி ஆவேசம்!

 

திருச்சியில் பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்திற்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூடப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையே தொடர்கிறது" எனத் தவெக அரசைச் சாடியுள்ளார்.

திருச்சியில் அரங்கேறியுள்ள இந்த அநாகரீகக் குற்றச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகாவது பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று பொதுமக்கள் நம்பினர். ஆனால், சிவகங்கை மானாமதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு புகுந்து ஊர்காவல்படை வீரரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்பே, திருச்சியில் ஒரு சிறுமி கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தற்பொழுது வரை வெறும் காகித அளவிலான திட்டங்களை மட்டுமே வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய சில முக்கியப் பாதுகாப்புத் திட்டங்களையும் பாமக தலைவர் தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். "தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இதற்காக முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்புப் படை' உள்ளிட்ட அனைத்துச் சிறப்புப் பாதுகாப்புத் திட்டங்களையும் தாமதமின்றித் தற்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். தவறு செய்பவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் அதிவிரைவாகக் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர சிறப்புப் பிரிவுகளை உருவாக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தந்து அறிக்கையில் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.