இளம்பெண்ணைக் கர்ப்பமாக்கி ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

 

இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா டி.சி.ஆர்.பி பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் டி.கே. வினோத் கிருஷ்ணா. இவர் முன்னதாக ஏலவும்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அப்பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்த நிலையில், ஆய்வாளர் வினோத் கிருஷ்ணா திடீரென அவருடனான தொடர்பைத் துண்டித்து ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுப் புகார் அளித்தார்.

அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தெற்கு மண்டல காவல் துறைத் தலைவர் உடனடியாகக் காவல் ஆய்வாளர் டி.கே. வினோத் கிருஷ்ணாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் கேரள காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.