இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய   இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

 

நெல்லை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் அருண்குமார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துத் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டருக்கும் மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நட்பு ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் பேசி முடிவு செய்திருந்த நிலையில், திடீரென இன்ஸ்பெக்டர் அருண்குமார் அந்தப் பெண்ணிடம் தொடர்பைத் துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அந்த இளம்பெண் வீரவநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று பிரச்சனை செய்ததோடு, நெல்லை ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.