நடுரோட்டில் இன்ஸ்டா பிரபலம் சுட்டுக்கொலை - பஞ்சாப்பில் அதிர்ச்சி!

 

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இன்ஸ்டா பிரபலமும், மேக்கப் கலைஞருமான மேட் சந்து (மதுசூதன்) மர்ம நபர்களால் நடுரோட்டில் சுடப்பட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோவர்களைக் கொண்டுள்ள மேட் சந்து, பேஷன் ஸ்டைலிஸ்ட்டாகவும், மேக்கப் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். மேலும், 'ஒ பொலி ஒ' என்ற பஞ்சாபித் திரைப்படத்திலும் நடித்துள்ள இவர், பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குரல் கொடுத்து வந்தார்.

அம்ரித்சரின் லோகர்கா பகுதியில் நேற்று மாலை தன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரது காரை நடுரோட்டில் வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய அவரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மேட் சந்துவின் உடலைக் கைப்பற்றியுள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய இரு மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருவதுடன், இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.