இன்ஸ்டா  காதலால்  விபரீதம்...  நள்ளிரவில் இளம்பெண் எரித்து கொடூரக்கொலை!

 

ஈரோடு பாரதி நகரில் வசித்து வருபவர்  24 வயதான வினோதினி என்ற இளம்பெண், கணவரை விட்டுப் பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். தனியார் கடையில் பணியாற்றி வந்த இவருக்குச் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 26 வயதான நவநீதிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால் நவநீதிகிருஷ்ணனின் சில நடத்தைகள் பிடிக்காததால், வினோதினி கடந்த சில நாட்களாக அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

வினோதினி வேறு நபருடன் பேசத் தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமடைந்த நவநீதிகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் இருந்து ஈரோட்டிற்கு நேரில் வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் வினோதினியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி பலவந்தமாக உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இனி உன்னிடம் பேச முடியாது எனக் கூறி வினோதினி வீட்டை விட்டு வெளியேறுமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வினோதினி மீது ஊற்றித் தீ வைத்தார்.

வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் சித்ரா, தந்தை சென்னப்பன் மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயில் கருகிய அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினோதினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தாலுகா காவல் துறையினர், கொலையில் ஈடுபட்ட நவநீதிகிருஷ்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்