இன்ஸ்டா ரீல்ஸை இனி வாட்ஸ்அப்பில் ஈஸியா ஷேர் பண்ணலாம்... மெட்டா நிறுவனத்தின் புதிய அப்டேட்!
ஸ்மார்ட் செல்போன் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை இணைக்கும் வகையில், மெட்டா நிறுவனம் புதிய வசதியொன்றைச் சோதித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் உள்ள புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ்களை வாட்ஸ்அப்பில் பகிர்வதற்காக அவற்றைச் சேமிப்பது அல்லது தனித்தனியாக இணைப்பைப் பகிர்வது போன்ற தற்போதைய நடைமுறைகளை மாற்றி எளிமைப்படுத்த இந்த அம்சம் கொண்டுவரப்படுகிறது.
பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை வாட்ஸ்அப்புடன் 'அக்கவுண்ட்ஸ் சென்டர்' மூலம் இணைத்துக் கொள்ளலாம். இந்த இணைப்பிற்குப் பிறகு, வாட்ஸ்அப்பில் மீடியா கோப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பகுதியிலேயே இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்ட ரீல்ஸ்கள் மற்றும் புகைப்படங்களைக் காண முடியும். அவற்றை எளிதில் நண்பர்களுக்குச் சாட் மூலமாகவோ அல்லது ஸ்டேட்டஸ் ஆகவோ நேரடியாகப் பகிரலாம்.
ஒரே மீடியாவை மீண்டும் பதிவிறக்கம் செய்து பதிவேற்றும் தேவையைக் குறைக்கும் இந்த வசதி, தற்போது குறிப்பிட்ட பீட்டா பயனர்களிடம் சோதிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.