ஸ்னாப்சாட்டுக்குப் போட்டி... 'இன்ஸ்டென்ட்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்!

 

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் செயலிக்குப் போட்டியாக 'இன்ஸ்டென்ட்' (Instant) என்ற புதிய புகைப்படப் பகிர்வு ஆப்பை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மட்டும் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த ஆப், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையான மற்றும் எடிட் செய்யப்படாத தருணங்களை உடனுக்குடன் பகிர்வதே இந்த புதிய செயலியின் முதன்மை நோக்கமாகும்.

இந்த இன்ஸ்டென்ட் ஆப்பில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும், மேலும் அவை 24 மணி நேரத்திற்குள் தானாகவே மறைந்துவிடும் வசதி கொண்டது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மொபைல் கேலரியில் ஏற்கனவே இருக்கும் படங்களை இதில் பதிவேற்ற முடியாது. செயலிக்குள் உள்ள கேமரா மூலம் அப்போதே எடுக்கப்படும் நேரடிப் படங்களை மட்டுமே இதில் பகிர முடியும் என்பதால், பதிவுகள் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருக்கும்.

உலக அளவில் ஸ்னாப்சாட் செயலிக்கு இருக்கும் செல்வாக்கை முறியடிக்க இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சில நாடுகளில் இது தனிச் செயலியாகவும், சில நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலியின் ஒரு பகுதியாகவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சோதனைகள் முடிவடைந்த பிறகு, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.