இன்று முதல் வாக்கு இயந்திரங்களில் 'சின்னம்' பொருத்தும் பணி தொடக்கம்.. வேகமெடுக்கும் தேர்தல் திருவிழா!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களைப் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகளைத் தேர்தல் ஆணையத்தின் EMS (EVM Management System) தளம் மூலம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய இந்த இரண்டாம் நிலை குலுக்கல் முறை ஒதுக்கீடு இன்று வரை நடைபெறுகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் இந்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் எந்தத் தொகுதிக்கு எந்த இயந்திரம் செல்லும் என்பது இறுதி செய்யப்படும்.
இரண்டாம் கட்டக் குலுக்கல் முடிந்தவுடன், இன்று முதல் அந்தந்தத் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் விவரங்களைப் பொருத்தும் பணி தொடங்கும். வாக்கு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், புகைப்படம் மற்றும் அவர்களுக்கான தேர்தல் சின்னம் அடங்கிய 'பேலட் பேப்பர்' பொருத்தப்படும்.
அதேபோல், விவிபாட் கருவிகளிலும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும். பணிகள் முடிந்தவுடன் இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் காப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்படும்.
அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய விழிப்புணர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 60%-க்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் பெண்கள் என்பதால், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான வாக்குச் சாவடிகளை ஒதுக்கீடு செய்ய மென்பொருளில் சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் C-Vigil மொபைல் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.