விலையுயர்ந்த செல்போன்களுக்கு பதில் ஸ்வீட் பாக்ஸ்... டெலிவரி ஊழியர் கைது!

 

 

சென்னை மண்ணடியைச் சேர்ந்த சையத் அப்ரிடி, திரு.வி.க. நகரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நுங்கம்பாக்கத்திலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் மற்றும் கூகிள் பிக்சல் ஆகிய 2 செல்போன்கள் பார்சல் சேவை மூலம் அவரது கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பார்சலை டெலிவரி செய்ய வியாசர்பாடியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மணீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். செல்லும் வழியில் அகரம் சந்திப்பு அருகே பார்சலைப் பிரித்து 2 செல்போன்களையும் திருடிய அவர், சந்தேகம் வராமல் இருக்க லட்டு அடங்கிய ஸ்வீட் பாக்ஸை உள்ளே வைத்து மீண்டும் ஒட்டி டெலிவரி செய்துள்ளார்.

பார்சலைப் பிரித்துப் பார்த்த சையத் அப்ரிடி, ஸ்வீட் பாக்ஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் டெலிவரி ஊழியர் மணீஷ்குமாரைக் கைது செய்த போலீசார், 2 செல்போன்களையும் மீட்டனர்.இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.