"என் மகனைக் கொன்னதுக்குப் பதிலா திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே..." - புனே கொலை வழக்கில் கதறும் தந்தை!
"என் மகனுக்கு இருந்த லேசான முடி உதிர்வுப் பிரச்சினை மணப்பெண் வீட்டாருக்கு முன்கூட்டியே தெரியும். அதில் அவளுக்கு அதிருப்தி இருந்திருந்தால், அவனைக் கொடூரமாகக் கொல்வதற்குப் பதிலாகத் திருமணத்தையே நிறுத்தியிருக்கலாமே..." என்று புனே லோஹாகாட் கோட்டையிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் கேதன் விஷாலின் தந்தை கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (26). ரியல் எஸ்டேட் துறையில் பெரும் தொழிலதிபரான இவருக்கும், மசாலா வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்த சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாகத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் நவம்பரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த ஜூன் 18 அன்று ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது.
சியா கோயல் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் கேதனைப் புனே அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லோஹாகாட் கோட்டைக்கு அழைத்துள்ளார். கோட்டையின் செங்குத்தான பாறைப் பகுதியில் இருவரும் புகைப்படம் எடுத்த போது, கேதன் எதிர்பாராதவிதமாக 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்துவிட்டதாகச் சியா கோயல் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் கதறி அழுது நாடகமாடியுள்ளார். 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கேதனின் சடலத்தை மீட்ட போலீசார், ஆரம்பத்தில் இதனை விபத்து என்றே வழக்குப் பதிவு செய்தனர்.
கேதனின் மரணத்தில் குடும்பத்தினருக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் அளித்த புகாரின் பேரில் புனே போலீசார் சியா கோயலின் அலைபேசி மற்றும் தொடர்புகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அதில், சியா கோயலுக்கு பாபுலால் சவுத்ரி (22) என்ற காதலன் இருப்பதும், அவனுடன் இணைந்து வாழ்வதற்காகவே, கோட்டைக்குக் கேதனைத் திட்டமிட்டு வரவழைத்துப் பின்னால் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்திருப்பதும் அம்பலமாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இக்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சியா கோயலையும் அவரது காதலன் பாபுலால் சவுத்ரியையும் போலீசார் கைது செய்து மாவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இருவரையும் வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கேதனுக்கு இருந்த முடி உதிர்வுப் பிரச்சினை காரணமாகவே சியா கோயல் இந்த கொலையைச் செய்ததாகப் பரவி வரும் தகவலுக்குக் கேதனின் தந்தை விளக்கமளித்துள்ளார். "சில மருத்துவக் காரணங்களால் என் மகனுக்கு லேசான முடி உதிர்வுப் பிரச்சினை இருந்தது உண்மை தான். ஆனால், நிச்சயதார்த்தத்திற்கு முன்பே சியாவின் குடும்பத்தினரிடம் இதனை நாங்கள் தெளிவாகக் கூறி விட்டோம்.
ஒருவேளை அவளுக்கு என் மகனைப் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஏதேனும் அதிருப்தி இருந்திருந்தாலோ, திருமண ஏற்பாடுகளை அப்படியே நிறுத்தியிருக்கலாம். அதை விடுத்து, அவனது உயிரைப் பறிக்க அவளுக்கு எப்படி மனது வந்தது? அவளுக்குக் கடுமையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அவர் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டுள்ளார்.