உட்கட்சி அரசியல் அழுத்தம்.. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்  பதவி விலக முடிவு - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி அரசியல் நெருக்கடி மற்றும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக, தனது பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக லண்டன் அரசியல் வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பிரிட்டனின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் சர்வதேச அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவிக்கு கடந்த சில மாதங்களாகவே ஆபத்து நீடித்து வந்த நிலையில், தற்போது அது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  கடந்த ஜூன் 18 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில், கெய்ர் ஸ்டார்மரின் தற்போதைய பிரதான அரசியல் எதிரியான ஆண்டி பர்ன்ஹாம் 54.8% வாக்குகளுடன் மாபெரும் வெற்றி பெற்று எம்பியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். இது ஸ்டார்மரின் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஸ்டார்மரின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் அதிருப்தி அடைந்து, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி, சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் உட்பட 4 முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளை அண்மைய நாட்களில் ராஜினாமா செய்தனர்.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது புதிய தலைமைத் தேர்தலுக்கான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கடிதம் அளித்துள்ளனர்.

பிரிட்டனின் புகழ்பெற்ற 'தி அப்சர்வர்' நாளிதழ் வெளியிட்டுள்ள பிரத்யேகத் தகவலின்படி, "பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது அமைச்சரவை சகாக்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பின், தனக்கு ஆதரவு குறைந்துவிட்டதால் இனி பிரதமர் பதவியில் நீடிப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ செக்கர்ஸ் கிராமப்புற இல்லத்தில் தங்கியுள்ள அவர், தனது மனைவியுடன் இறுதி கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நாளை திங்கள்கிழமை அவர் தனது பதவி விலகல் மற்றும் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையை முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது."

அதே நேரத்தில், பிரிட்டன் அரசின் உத்தியோகபூர்வ அரசு வட்டாரங்கள் இந்த ராஜினாமா தகவலை முற்றிலுமாக உறுதிப்படுத்த மறுத்துள்ளனர். பிரதமர் ஸ்டார்மர் நாட்டின் நிர்வாகப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்டார்மர், "எங்கள் கட்சிக்குள் எந்தவொரு தலைமைப் போட்டி வந்தாலும் அதை நான் எதிர்கொள்வேன், களம் காண்பேன். எக்காரணம் கொண்டும் நான் பதவியை விட்டு ஓடமாட்டேன். உட்கட்சிப் பூசல்களால் தொழிலாளர் கட்சி சிதைந்து போவதை அனுமதிக்க முடியாது" என்று ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார்.