undefined

சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன் 'எல் மென்சோ' சுட்டுக்கொலை!

 

மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நெமசியோ ஓஸ்குவெரா, இன்று மெக்சிகோ ராணுவத்தால் கொல்லப்பட்டான்.

மெக்சிகோ ராணுவமும் சிறப்புப் படையினரும் இணைந்து ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள 'போர்ட்டோ வல்லார்தா' (Puerto Vallarta) என்ற பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், கடத்தல் கும்பல்கள் இடையே 'எல் மென்சோ' (El Mencho) என்று அழைக்கப்படும் நெமசியோ ஓஸ்குவெரா கொல்லப்பட்டான்.

தலைவன் கொல்லப்பட்ட செய்தி பரவியதும், அவனது ஆதரவாளர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோவின் பல்வேறு நகரங்களில் வன்முறையில் இறங்கியுள்ளனர். குறிப்பாகப் போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா போன்ற நகரங்களில் வன்முறை தீயாகப் பரவி வருகிறது. வன்முறை கும்பல் சாலைகளில் வாகனங்களை எரிக்கவும், சாலை மறியல்களில் ஈடுபடவும் தொடங்கியுள்ளனர். இதனால் மாகாணம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. வன்முறை காரணமாகப் பல முக்கிய நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த கும்பல்கள் தங்களுக்கு இடையூறாக இருக்கும் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் கொடூரமாகக் கொலை செய்வது வழக்கம். 'எல் மென்சோ' மெக்சிகோவின் மோஸ்ட் வான்டட் குற்றவாளிகளில் ஒருவனாக இருந்து வந்தான். அவனது மறைவு போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அவனது ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைச் சம்பவங்கள் மெக்சிகோ மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.