இணைய இணைப்பு இல்லாமல் பணம் அனுப்பலாம்... போன்பேவில் புதிய வசதி அறிமுகம்!
டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் போன்பே நிறுவனம், இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ (UPI) பரிமாற்றங்களை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சாதாரண (ஃபீச்சர்) போன் பயனாளர்களும் இணையம் இல்லாமல் பணம் அனுப்பும் வகையில் இந்த புதிய சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சேவையின் மூலம் எளிய முறையில் எஸ்.எம்.எஸ் (SMS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணம் அனுப்ப முடியும். இதன் காரணமாக, கிராமப்புறங்கள் மற்றும் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளிலும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் எளிதாகப் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பயனாளர்கள் பணம் அனுப்புவதுடன், தங்களது வங்கிக் கணக்கில் உள்ள மீதித் தொகையைச் சரிபார்க்கவும் முடியும். தொழில்நுட்ப வசதிகள் எளிய மக்களைச் சென்றடையும் வகையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வசதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.