"உடனே தலையிடுங்க!" - சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் அவசரக் கடிதம்!
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர் விநியோக நிறுத்தம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி குறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்: வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தைச் சாக்குப்போக்காகக் கூறி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் வணிகச் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். சர்வதேச சிக்கல்களைக் கையாண்டு, மாநிலங்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்குத் தேவையான எரிவாயு இருப்பை உடனடியாக வழங்க மத்திய பெட்ரோலியத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அத்தகைய சூழல் உருவாகாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் இந்தக் கடிதம் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.