நாளை பனையூரில் தவெக வேட்பாளர் நேர்காணல்.. களைக்கட்டும் தேர்தல் திருவிழா!

 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சித் தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் பனையூரில் நடைபெற உள்ளது. சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கிய விஜய், தற்போது தேர்தல் களப்பணிகளில் நேரடியாக இறங்கியுள்ளார்.

மார்ச் 10ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த தவெக நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தொண்டர்களிடம் கட்சித் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நேர்காணல் நடத்துகின்றனர்.

விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்த ரகசியம் இந்த நேர்காணலுக்குப் பிறகு வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது வரை மதுரை அல்லது சென்னையின் ஒரு தொகுதி எனப் பரவலாகப் பேசப்படுகிறது.  கட்சியில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்களுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த தெளிவு பிறக்கும்.