ஐபிஎல் 2026 தொடக்க விழா ரத்து - BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு - என்ன காரணம்?!

 

ஐபிஎல் 2026 தொடரின் பிரம்மாண்டத் தொடக்க விழாவை ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடி முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நேரிட்ட சோக சம்பவத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் நடைபெறும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தொடக்க விழா, இந்த 2026ம் ஆண்டுத் தொடரில் இடம்பெறாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த ஆண்டுத் தொடக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத  உள்ள நிலையில்,  வழக்கமாகத் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் பாலிவுட் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகள் எதுவும் இம்முறை நடைபெறாது. ஆட்டம் நேரடியாகத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா ரத்து செய்யப்பட்டாலும், வரும் மே 31, 2026 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமான நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவிற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.