ஐபிஎஸ் அருண் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

 

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவியை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த விவகாரத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் (முன்னாள் ஆவடி ஆணையர்) ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணஜோதி ஆகியோரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக, பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் ஷர்மா என்பவர் மீது கடந்த காலங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஷர்மா, பின்னர் நீதிமன்றம் மூலமாக ஜாமீனில் விடுதலையானார். இருப்பினும், இந்த விவகாரத்தில் சந்தோஷ் ஷர்மா மீது காவல் துறை தரப்பில் குண்டர் சட்டத்தின் கீழ் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் தந்தை மீது அரசியல் உள்நோக்கத்தோடு சட்டவிரோதமாகக் குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, சந்தோஷ் ஷர்மாவின் மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஜாமீனில் வெளிவந்த நபர் மீது அவசர அவசரமாகக் குண்டர் சட்டம் போடப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதில் அதிகார அத்துமீறல் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்தோஷ் ஷர்மா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்த அப்போதைய ஆவடி மாநகர காவல் ஆணையரும், தற்போதைய சென்னை பெருநகர காவல் ஆணையருமான ஐபிஎஸ் அதிகாரி அருண், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

உயர் அதிகாரியே நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள சம்பவம், தமிழக காவல் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.