எதிரிகளைத் தவிர அனைவருக்கும் ஹார்முஸ் நீரிணை திறப்பு - ஈரான் அறிவிப்பு!

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை, எதிரிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் திறந்து விடப்பட இருப்பதாக ஈரான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

ஈரான் தனது அச்சுறுத்தல்களைக் கைவிட்டு 48 மணி நேரத்திற்குள் நீரிணையைத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலும் அழிப்போம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நெருக்கடிக்கு மத்தியிலும், சர்வதேச கடல்சார் அமைப்புக்கான (IMO) ஈரான் தூதர் அலி மவுசவி ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்:

ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்டுச் சரக்குக் கப்பல்கள் ஈரானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். தற்போதைய பதற்றமான சூழலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களே காரணம் என்றும், ஈரான் எப்போதும் ராஜதந்திர வழிகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்தப் போரில், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறினாலும், ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு வளையத்தை மீறி டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.