ஈரான் அமெரிக்காவை மதித்தால் மட்டுமே போர் முடியும் - ட்ரம்ப் அதிரடி!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர்ச் சூழலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர 'பரஸ்பர மரியாதை' மட்டுமே ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார். ஈரான் அமெரிக்காவை மதிக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் வராது என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, ஹார்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு வரும் சூழலில் டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகச் சாதகமான முறையில் நகர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
"அச்சுறுத்தல்களை விடவும் தூதரக ரீதியிலான மரியாதையே உலக அமைதிக்கு மிக முக்கியம். நான் 'பயம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, அது தவறான வார்த்தை. ஆனால், ஈரான் எங்களை மதிக்கும் வரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்று அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உலகப் பொருளாதாரத்தின் முக்கியப் புள்ளியான ஹார்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை முழுமையாகத் திறக்கப்படும். இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெருமளவில் கட்டுக்குள் வரும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக உடன்படிக்கையின்படி, அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு எவ்வித கட்டணமும் இன்றி பாதுகாப்பான பாதையை வழங்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைகளில் இருந்து அமெரிக்காவின் நிதித்துறை 60 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும், ஈரான் விதிகளை மீறினால் மீண்டும் பொருளாதாரத் தடைகளும் கடற்படை முற்றுகைகளும் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள செனட் அவையிலேயே சில உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததால் இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இந்தத் தீர்மானம் தமக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், ஈரானுடனான இறுதி அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தாம் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவேன் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார்.