குவைத் மீது ஈரான் ஏவுகணை மழை... இந்தியத் தொழிலாளி பலி - ஒரு மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்! 

 

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று மாலை குவைத்தில் உள்ள ஒரு முக்கிய மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்குப் பணியில் இருந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவஹர் ஹயாத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏவுகணை தாக்கியதில் சேவை கட்டடம் முற்றிலும் சிதைந்துள்ளதோடு, அப்பகுதியில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் குறித்து குவைத் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர வைக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 307 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 616 டிரோன்கள் மூலம் குவைத் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 டிரோன்களைக் குவைத் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்துள்ளது. ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளை அச்சுறுத்தவும் ஈரான் இந்த உத்தியைக் கையாண்டு வருகிறது. குறிப்பாக எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் நிலையங்களைக் குறிவைப்பதன் மூலம் அந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சிதைக்க ஈரான் முயல்கிறது.

குவைத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் மற்றும் இந்தியரின் மரணம் அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.