ஈரானுக்கு புதிய ஜாக்பாட் - 7.5 லட்சம் கோடி கன அடி இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு!

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே, ஈரானில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் உள்ள நிலப்பரப்பில் இந்தப் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 7.5 லட்சம் கோடி கன அடி (212.4 பில்லியன் கன மீட்டர்) ஆகும். இதில் 5.7 லட்சம் கோடி கன அடி எரிவாயுவை நேரடியாகப் பிரித்தெடுக்க முடியும் என ஈரான் எண்ணெய் அமைச்சர் மோசென் பாக்னிஜாத் தெரிவித்துள்ளார்.

நிலப்பரப்பில் அமைந்துள்ளதால், இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான செலவுகளும், எரிவாயு எடுப்பதற்கான செயல்பாட்டுச் செலவுகளும் கணிசமாகக் குறையும். பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த எரிவாயு வளம், அந்நாட்டின் உள்நாட்டு எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் பொருளாதாரத்திற்குப் பெரும் பக்கபலமாக அமையும்.