கமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் அரசு முறை இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

வளைகுடா பகுதியில் பல மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான போருக்குப் பிறகு, தற்பொழுது ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த இறுதிச்சடங்கு தேதிகள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் 6 நாள் இறுதிச்சடங்கு சடங்குகள் வரும் ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை ஈரானின் முக்கியப் புனித நகரங்களில் நடைபெறவுள்ளன.

கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட போதிலும், அங்கு நீடித்து வந்த போர்ச் சூழல் காரணமாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு நடத்தப்படும் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில், ஈரான் முழுவதிலும் இருந்து சுமார் 1.5 முதல் 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கையானது, கடந்த 1989-ஆம் ஆண்டு ஈரானின் ஸ்தாபகர் அயேதுல்லா ருஹொல்லா கொமேனியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 1 கோடி மக்களின் உலக சாதனையை முறியடிக்கும் வரலாற்று நிகழ்வாக மாறும் எனத் தெஹ்ரான் மேயர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்துப் பேசிய அதே நாளில், இந்தியப் பிரதமருக்கு இந்த அழைப்பு வந்துள்ளது சர்வதேச அரசியலில் உற்று நோக்கப் படுகிறது.

கமேனி காலமான சில நாட்களிலேயே, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்தார். தற்பொழுது வந்துள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு, இந்தியா - ஈரான் இடையேயான தூதரக உறவில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த 6 நாள் இறுதிச்சடங்கு நிகழ்வில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல்வேறு அண்டை மற்றும் உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களும், தூதுக்குழுவினரும் பங்கேற்க உள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பிரம்மாண்ட வழிபாட்டுத் தலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, ஜூலை 7 அன்று புனித நகரான கும் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக ஜூலை 9 அன்று கமேனியின் சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிட வளாகத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.